
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை சுகாதாரத்துறை ஆய்வில் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட ஆணையமானது திமுக ஆட்சியில் இறுதிக்கட்டபணிகளை முடித்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டுக்கு அனுப்பிசிகிச்சைகளை அளிக்க அப்போதைய அரசு இயந்திரம் முன்வராதது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றது.
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையஅறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த அரசின் தலைமை வழக்கறிஞர் சார்பில், 'மறைந்த முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் வைக்கப்பட்டு தற்பொழுது மருத்துவ குறிப்புகளுக்காக சுகாதாரத் துறையின் அறிக்கை ஆய்வில் உள்ளது. ஆய்வறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இனி அறிக்கையின் அடிப்படையில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்தும் அடுத்த வாரம் திங்கட்கிழமை பதில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 27 ஆம் தேதி ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
Follow Us