Arudra Fraud; police gonna investigate Actor R.K. Suresh

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

Advertisment

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநரும்பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அதே நேரத்தில், இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகரும்பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ்க்கும் மோசடியில் தொடர்பிருப்பதாக ரூசோ வாக்குமூலம் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.