Skip to main content

“இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்துக” - கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Arts and Literature Forum condemns to stop insulting DM Krishna

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே.கங்கா மற்றும் மாநில பொதுச்செயலாளர் த. ஆறம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியச் சமூகத்தில் ஊடாடிக் கிடக்கும் ஆழமான சமூகப் பிரிவினைகளை மாற்றிடவும், வர்க்க மற்றும் சாதியப் பிளவுகளைத் தகர்த்தெறியவும் இசை என்ற மகத்தான ஊடகத்தைப் பயன்படுத்துவதோடு, இசையை எல்லா மக்களுக்குமான ஒன்றாக ஆக்கிடும் நோக்கத்தோடு பல்லாண்டுகளாக பாடுபட்டு வரும் இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா 2016 இல் ஆசியாவிலேயே மிகப்பெரிய விருதான ரமோன்  மகாசேசே விருதைப் பெற்றவர்.

இவர் ஒரு சிறந்த கர்நாடக இசைப் பாடகர், இசை அமைப்பாளர், இசை ஆய்வாளர், எழுத்தாளர், ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர் என்பதோடு நில்லாமல்,  முற்போக்கான சமூக செயல்பாட்டாளராகவும் நம் நாட்டில் வலம் வரும் ஒரு அற்புதமான கலைஞராவார். கர்நாடக சங்கீதத்தை ஒரு குறிப்பிட்ட உயர்சாதி வகுப்பினருக்கு மட்டுமே உரியது என்பதை மாற்றி, கர்நாடக சங்கீதம் அனைத்து மக்களுக்குமானது என இசையில் சமூக நீதி பேசித் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். பேச்சுக்கும் செயலுக்கும் இடைவெளி இன்றிச் செயலாற்றும் வல்லமை மிக்கவராகத்  திகழ்பவர் டி.எம். கிருஷ்ணா ஆவார்.

கர்நாடக சங்கீதத்தின் பாடுபொருளாக ஸ்ரீ நாராயண குருவின் பாடல்களையும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், இஸ்லாமிய, கிறிஸ்து கடவுள்களிடம் காணும் மானுட மேன்மைகளையும் தன் இசையில் கொண்டுவந்து, மத சகிப்பின்மைக்கும், சமூக அநீதிகளுக்கும் எதிராக இசை என்ற ஆயுதம் தரித்து வலம் வருபவர். டி.எம். கிருஷ்ணாவின் கலைச் சேவையைக் கௌரவிக்கும் வகையில் சென்னை மியூசிக் அகாடமி  இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை இவருக்கு வழங்க முன்வந்துள்ளது‌. இதன் பொருட்டு டிசம்பர் மாதம் நடைபெறும் அதன் ஆண்டு மாநாட்டிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பினையும்  டி.எம்.கிருஷ்ணா பெற்றுள்ளார்.

இவர் தலைமை தாங்கும் மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என சாதி, மத மேலாதிக்க உணர்வுடைய  ஒரு சில கலைஞர்கள் அறிவித்துள்ளனர். இதனைச் சில கலைஞர்கள் வரவேற்கவும் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் எதிர்வினை ஆற்றும் போது, அவர்கள் பயன்படுத்திய வாசகங்கள் ஜனநாயக மாண்புகளுக்கு  முற்றிலும் புறம்பாக இருக்கின்றன. உண்மையைச் சொன்னால், கலைஞர்களாக அறியப்படுகிற இவர்கள் தங்களின் சாதிய வன்மத்தையும், மத துவேசத்தையும் தம் வாசகங்கள் மூலமாகப் பச்சையாகக் கக்கியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு தங்களின் சகிப்பின்மையைப் பகிரங்கமாகக் காட்டும் அதே நேரத்தில், தந்தை பெரியார் குறித்தும் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் பரப்பியும் வருகிறார்கள்.

இந்த அநாகரீகமான போக்கினை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. கலையும் இலக்கியமும் சாதி, மத, மொழி, இன அடையாளங்களைத் தாண்டி, அனைத்து மக்களுக்குமானது, மக்களின்  மேன்மைக்கானது. எனவே டி. எம். கிருஷ்ணா என்ற அற்புதமான கலைஞனை  அவதூறு செய்யும் நோக்கில் செய்யப்படும்  பிரச்சாரத்துக்கு  எதிராக கலைஞர்களும், எழுத்தாளர்களும், முற்போக்கு ஜனநாயக உலகமும் கிளர்ந்து எழுந்து, இந்த விஷமத்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அறைகூவல் விடுக்கிறது." என தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்..! டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

New IT rules ..! High court orders govt to respond to TM Krishna case

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்துவந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது.

 

மத்திய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம். கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவர் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்ய காரணமாக அமைந்துள்ளது எனவும், தனி உரிமையைப் பாதிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

 

டி.எம். கிருஷ்ணாவின் இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவுக்கு 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தது.