Skip to main content

''காரில் செல்லும் போது கலைஞர் வேடிக்கையாகச் சொன்னார்...''- மேடையில் நினைவைப் பகிர்ந்த முதல்வர்

Published on 20/11/2022 | Edited on 20/11/2022

 

கீதா பவன் அறக்கட்டளையின் சார்பில் 11 வது ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருமண நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்தார். உடன் கனிமொழி.எம்.பி. அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வின்போது மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''நாட்டில் இப்பொழுது எப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. எப்போது ஆட்சிக்கு வந்தோமோ அப்போதிலிருந்து மழை பொழிந்து வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா அந்த கொடுமையிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்தோம். அதனைத் தொடர்ந்து ஒரு பத்து நாள் கூட இடைவெளி இல்லை மழைதான் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. வேடிக்கையாக ஒரு உண்மை செய்தியைச் சொல்கிறேன். நான் 1996-ல் சென்னை மேயராக பொறுப்புக்கு வந்தேன். முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான் தான் பொறுப்புக்கு வந்தேன். நான் பொறுப்புக்கு வந்த அடுத்த நிமிஷமே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. ஒரு 20 நாள் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

 

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து சீர்படுத்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது முதல்வர் கலைஞர். முதல்வராகிய நானும் பார்வையிட வேண்டும், மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னார். எனவே மாநகராட்சி வேனில் அவரை உட்கார வைத்து அவரையும் அழைத்துக் கொண்டு சென்னை முழுக்க சுற்றினோம். காரில் சென்று கொண்டிருக்கும் போது வேடிக்கையாக கலைஞர் சொன்னார் ''ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்தாலும் வந்தான் மழை பேயராக இருக்கிறது' என்றார். அது மாதிரி தண்ணீர் பிரச்சனைக்கு பிரச்சினையே இல்லை. அந்த அளவிற்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையை சமாளித்துக் கொண்டிருக்கிறோம். கடந்தாண்டு மழை பெய்த போது என்ன நிலை? அது உங்களுக்கு தெரியும். இப்பொழுது என்ன நிலை என்று உங்களுக்கு தெரியும். முழுசா செய்து விட்டோம் என்று சொல்லவில்லை. 95 சதவீதம், 85 சதவிகிதம் தான் முடித்திருக்கிறோம். அதுவே மக்களிடத்தில் இன்று பெரிய பாராட்டைக் கொடுத்து இருக்கிறது. இன்னும் சில பணிகள் மிச்சம் இருக்கிறது. அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செஞ்சு முடிப்போம் என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் எடுத்துச் சொல்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்