
கொலை வழக்கில் தண்டனை பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). கூலித்தொழிலாளி. இவர், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சிங்கிபுரம் துணை மின் நிலையம் பகுதியில் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக வாழப்பாடி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், அந்த வழக்கில் தண்டனை பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
கொலை வழக்கில் தண்டனை பெற்று, தலைமறைவான வாலிபர், கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து காவல்துறையினர் வசம் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.