/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adv-malar-art.jpg)
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுடன் மலர்க்கொடி தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரையில் 14 பேர் கைது செய்யபட்டனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் மலர்கொடி சேகர் அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டார்.
எனவே கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மலர்கொடி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி கடந்த 2001 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அதிமுக பேச்சாளரான தோட்டம் சேகரின் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)