ADVERTISEMENT

திருவிதாங்கூர் மகாராஜா உள்ளிட்டோர் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட்..! - எழும்பூர் நீதிமன்றம் எச்சரிக்கை

09:14 AM Jan 12, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நிலமோசடி வழக்கு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட திருவிதாங்கூர் மகாராஜா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமாக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்தன. அதில், 171 சென்ட் நிலத்தை தனியார் நிறுவன அதிபரான சுப்பையா என்பவருக்கு 1994ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜா குடும்பத்தினர் விற்பனை செய்துள்ளனர். இந்த நிலத்தை, போலி ஆவணம் மூலம் மறு விற்பனை செய்தது 2006ஆம் ஆண்டு தெரியவந்தது. இதனையடுத்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனை தீராததால், 2013ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, கெளரி பார்வதி பாய், அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய், அஸ்வதி திருநாள் ராமவர்மா, மூலம் திருநாள் ராமவர்மா, அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா ஆகிய 6 பேர் மீதும், நிலத்தை வாங்கிய ஏ.சி.ஆர்.ராஜ் கணேசன், பி.ஆர்.ராம்பிரபு ராஜு என 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

ஏழு வருடங்கள் கழித்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

11ஆம் தேதி, எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜ் முன்பு திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அஸ்வதி திருநாள் ராம வர்மா, அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா மற்றும் நிலத்தை வாங்கிய ஏ.சி.ஆர்.ராஜ் கணேசன், பி.ஆர்.ராம்பிரபு ராஜ் ஆகியோர் ஆஜராகி, முதலில் ஜாமீன் பெற்றுள்ளனர். பின் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், விசாரணைக்கும் ஆஜராகியுள்ளனர். மீதமுள்ள நான்கு பேரில், தற்போதைய மன்னரான மூலம் திருநாள் ராம வர்மா, கெளரி பார்வதி பாய், அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய் ஆகியோர் ஆஜராகவில்லை.

எனவே, வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாகவும், அப்போது மீதமுள்ள 3 பேர் ஆஜராக வேண்டுமென்றும், இல்லையெனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார். இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இறந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை, புகார்தாரரின் வழக்கறிஞர் ப்ரதீப் ராஜ், பேட்டியின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT