arrest warrant congress  district chairman

Advertisment

தமிழக காங்கிரஸ் பிரமுகருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது சென்னை எழும்பூர் விரைவு நீதிமன்றம். இந்த சம்பவம் தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கிறார் ரஞ்சன்குமார். முஸ்லிம் பிரமுகர் ஒருவரிடம் 35 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த குற்றச்சாட்டில், ரஞ்சன்குமார் மீது எழும்பூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த பண மோசடி வழக்கை எழும்பூர் விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது. ஆனால், இவ்வழக்கின் விசாரணையின்போது ஆஜராகாமல் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வந்திருக்கிறார் ரஞ்சன்குமார். இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ரஞ்சன்குமார் ஆஜராகவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த விரைவு நீதிமன்றம், அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான பிடிவாரண்டையும் கடந்த 10ஆம் தேதி பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் ஒருவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு தமிழக காங்கிரஸ் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பண மோசடி வழக்கில் பிடிவாரண்ட்டை எதிர்கொள்ளும் ரஞ்சன்குமாருக்கு எதிராக சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் மேலும் சில வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கிறது சென்னை போலீஸ்.