Arrest Shakti School Principal! Salem journalists emphasis!

நக்கீரன் பத்திரிகை நிருபர்கள் மீது ரவுடிகளை ஏவி தாக்குதல் நடத்திய கனியாமூர் சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமாரை கைது செய்ய சேலம் மீடியா கிளப் காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மீடியா கிளப் சிறப்பு செயற்குழு கூட்டம், சேலத்தில் வியாழக்கிழமை (செப். 22) நடந்தது. தலைவர் முரசொலி கே.ஆர்.திருவேங்கடம் தலைமை வகித்தார். சிறப்புத் தலைவர் கூடலரசன் முன்னிலை வகித்தார்.

Advertisment

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி சி.பி.எஸ்.இ பள்ளி தொடர்பாக நக்கீரன் பத்திரிகை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், கேமராமேன் அஜீத் ஆகியோர் செப். 19ம் தேதி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பணிகளை முடித்துக் கொண்டு சேலம் திரும்பும் வழியில், பள்ளி தாளாளர் ரவிக்குமார் தூண்டுதலின்பேரில் ரவுடி கும்பல், தாமோதரன் பிரகாஷ், அஜீத் ஆகியோர் சென்ற காரை வழிமறித்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.

இதனால் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ரவுடி கும்பலை அனுப்பி தாக்குதல் நடத்திய பள்ளி தாளாளரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களின் நலன்களைக் காக்க, தமிழக அரசு பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கியது. அதேபோல், பத்திரிகையாளர்கள் உயிர் பாதுகாப்புக்கென தனி சட்டம் இயற்றி தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் காந்தி, இளையராஜா, ஜெகன், தயாளன், பாபு, குமரேசன், சக்திவேல், ஜி.விஜயகுமார், டி.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.