Skip to main content

டாஸ்மாக் திறப்பு வேண்டாம் என்றதற்காக, பெண்களை சிறையில் அடைத்த போலீஸ்!!!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
ARREST INCIDENT IN ERODE



சாலையில் இறங்கி போராடவில்லை, பேருந்தை நிறுத்தவில்லை, ஏன் அரசே திறந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஆர்பாட்டம் செய்யவில்லை. அவர்களின் சொந்த வீட்டின் முன் உள்ளத்தின் உணர்வுகளை அரசுக்கு வேண்டுகோளாக வைத்தாலே அது சட்டப்படி குற்றம் என புதிய சட்டம் போட்டிருக்கிறது ஈரோடு போலீஸ்.


கரோனா... கரோனா... என்று பேசக் கூடிய அனைத்து உதடுகளையும் பேச வைத்த இந்த வைரஸ், என்று ஒழியும் என்று யாருக்கும் தெரியவில்லை. அது அழிகிறதோ இல்லையோ ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிந்து அதள பாதாளத்திற்கு சென்று விட்டது.

ஊரடங்கால் மக்களின் உள்ளத்தையும், உழைப்பையும் முடமாக்கி போட்டுவிட்ட மத்திய, மாநில அரசுகள், உழைக்க கூடிய சக்தி இருந்தாலும் எந்த தொழிலிலும் உடனே உற்பத்தி செய்ய வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் தமிழக அரசு வருவாயை ஈட்டுவதற்காக திட்டமிட்டு அறிவித்தது தான் 7ந் தேதி முதல் டாஸ்மாக் மது கடைகள் திறப்பு என்பது. அதற்கு முதல் நாள் 6 ந் தேதி ஈரோடு எஸ்.எஸ்.பி.நகரில் உள்ள மக்கள் சிலர், ஐயா அரசாங்கத்தை நடத்துபவர்களே மதுக்கடைகளை திறக்காதீங்க... வேறு வழியில்லாம வீட்டில் உள்ள பொருட்களை வித்து அந்தப் பணத்தில் குடிப்பார்கள்.. வேண்டாமய்யா இந்த குடி கெடுக்கும் குடி என கோரிக்கை வைத்ததோடு, ஒரு சிறிய பேப்பர் தட்டியில் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என கையால் எழுதி அதை தங்கள் வீட்டு முன் நின்று தட்டியை காட்டி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

 

 


இந்த தகவல் போலீசின் பார்வைக்கு போக, சிறிது நேரத்திலேயே போலீஸ் வண்டி அங்கு சென்று ஏதோ குற்றவாளிகளை பிடிப்பது போல் அவர்களை பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள். ஆண்கள் மூன்று பேர், பெண்கள், சிறுவர்கள் தலா இரண்டு பேர் என ஏழு பேரை காவல் நிலையத்தில் வைத்து தீவிரவாதிகளை விசாரிப்பது போல் விசாரித்துள்ளனர். பிறகு அன்று மாலையில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவரை விடுவித்து விட்டு பெண்கள் இருவர் ஆண்கள் இருவரை கைது செய்தனர். அதில் ஒரு 80 வயது பெரியவர் மற்றும் நடுத்தர வயது இரண்டு பெண்கள் " ஐயா நாங்கள் இதுவரை போலீஸ் ஸ்டேசன் பக்கமே எட்டிப் பார்த்ததில்லை. எங்க வீட்டின் முன்பு நின்று மதுக்கடை திறக்க வேண்டாமுனு அரசுக்கு கோரிக்கை தானே வைத்தோம்" என பரிதாபமாக கேட்டுள்ளனர்.

 

 

ARREST INCIDENT IN ERODE


ஆனால் வயது அடிப்படையில் கூட ஈவு இரக்கம் காட்டாத ஈரோடு போலீசார், மேலிட அதிகாரி போட்ட உத்தரவுபடியே நடக்கிறோம். கைது செய்து விட்டோம் என கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அன்று இரவோடு இரவாக இரு பெண்களையும் கோவைக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்துள்ளனர். வயதான பெரியவரையும் மற்றொரு இளைஞரையும் ஈரோடு சப் ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள்.


இந்த கைது நடவடிக்கைக்கு ஈரோடு எஸ்.பி.சக்திகணேசன் கூறும் காரணம், "144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்பதோடு  போராட்டமும் நடத்தினார்கள்" என்பதுதான்.

அவர்கள் வசிக்கும் பகுதி சாதாரணமான ஒரு சிறிய வீதியில் இருபுறம் குடியிருப்புகளுக்கு நடுவில் 12 அடி அகலத்தில்தான் சாலை உள்ளது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் எதிர் எதிர் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரும்போது அந்த 12 அடி சாலையில் எவ்வளவு இடம் இருக்க முடியும்? அதுவும் அவர்கள் ஏழை விசைத்தறி தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த டாஸ்மாக் திறந்தால் ஆண்களின் குடியால் மேலும் மேலும் வறுமையும், கடன் சுமையும் ஏறுமே என்ற வேதனையில் அரசுக்கு வேண்டுகோள் வைப்பதுபோல் அட்டையில் எழுதி காட்டி அதை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்கள். இந்த செயல் என்பது அவர்களை கைது செய்யும் அளவுக்கு அவ்வளவு பெரிய சமூக குற்றமா? அல்லது சட்ட விரோதமா...? என்பதை உயர் அதிகாரிகள் தலையிட்டு, ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசனுக்கு  அறிவுரை வழங்க வேண்டும் என ஈரோடு போலீசாரே கூறுகிறார்கள்.

 

 


இந்திய அரசியல் சட்டம் அனுமதித்துள்ளதற்கு எதிராகவும், போராட்ட உணர்வுள்ளவர்கள் என்றாலே அவர்கள் சமூக விரோதிகள் என்ற பார்வையும் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளருக்கு இருக்கிறது என கூறுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கறிஞர் சுபாஷ். வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவால் நீதிமன்றம் மூலம் 8ந் தேதி மாலை நான்கு பேரும் ஜாமினில் விடுதலை பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த கைது நடவடிக்கையால் இரண்டு பெண்களுக்கும், வயதான பெரியவருக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் பரிதாபம். 

 

 

 

சார்ந்த செய்திகள்