Arrest based on scientific evidence  police explanation

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அங்கு பயிலும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் பயிலும் தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் இருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கால்வதுறை விளக்கமளித்துள்ளது. அதில், “கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 ஆம் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ - மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment