Arrears should be released CM MK Stalin letter to pm

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (13.01.2025) கடிதம் எழுதியுள்ளார். அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்க மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகதிற்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எழுதியுள்ள அக்கடிதத்தில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

Advertisment

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பல்வேறு அளவுகோல்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. மேலும், தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர். 36% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29% தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

இத்திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டில், 06.01.2025 வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஏற்கனவே 23.36 கோடி மனித உழைப்பு நாட்களை எட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கனவே 23.11.2024 அன்று மத்தியஅரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தற்போது தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்து விட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 1,056 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அத்துடன் தமிழ் மக்களின் முதன்மையான மற்றும் முக்கியமானதுமானதுமான அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை, ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது என்பதை தாம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இத்திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு இந்தியப் பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment