Skip to main content

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் சொந்த ஊரில் தகனம்

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

nn

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ்-ரத்தினம் தம்பதியர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் யோகேஷ் குமார் என்ற மகன் உள்ளனர். பெண் பிள்ளைகள் இருவருக்கும் திருமணமான நிலையில் யோகேஷ் குமார் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது பஞ்சாபில் பணிபுரிந்து வந்தார்.

 

இந்நிலையில் பஞ்சாப் ராணுவ முகாமில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் யோகேஷ் குமார் உட்பட 4 பேர் பலியானார் என இந்திய ராணுவம் உறுதி செய்தது. முகாமில் உயிரிழந்த யோகேஷ் குமாரின் உடல் அடக்கம் செய்வதற்காக இன்று டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து தேவாரத்தில் இருந்து மறைந்த யோகேஷ் குமாரின் நண்பர்கள் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக அவரது சொந்த ஊரான மூணாண்டிபட்டி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.  

 

அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் இராமகிருஷ்ணன் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையே மறைந்த யோகஷ்குமார் உடலுக்கு இராணுவ மரியாதை வழங்கப்படவில்லை எனக் கூறி  யோகேஷ்குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ மரியாதை வழங்கவில்லை என்றால் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என 20 நிமிடங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ராணுவம் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து யோகேஷ்குமாரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர்  அவரது உடலில் தேசியக் கொடி போர்த்தியவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று ரங்கநாதபுரம் மயானத்தில் அடக்கம் செய்வதற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று அவர்களின் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்