Armstrong's case; Court custody for Aswatthaman

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கைது செய்யப்பட்ட பிறகு அவரை கட்சியிலிருந்து காங்கிரஸ் நீக்கியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, அருள் உள்ளிட்டவர்கள் மூன்றாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அஸ்வத்தாமனை ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.