Armstrong'last journey has begun

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவில், “திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவு மண்டபம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். காவல்துறை சார்பில் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது. இதில் அக்கட்சி தொண்டர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பெரம்பூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பொத்தூருக்கு அவரது உடல் வாகனம் மூலம் கொண்டுச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தையொட்டி 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் சவப்பெட்டியில் ‘ஜெய்பீம்’, ‘சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என வாசகங்கள் பொதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.