Advertisment

ஆம்ஸ்ட்ராங் வழக்கு; 1.35 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் ஒப்படைப்பு!

Armstrong case; 1.35 lakh pages of charge sheet copy handed over

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கையானது கடந்த மாதம் 3 ஆம் தேதி (03.10.2024) எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையின் படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகப் பிரபல ரவுடி நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாகச் சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

இந்த குற்றப்பத்திரிக்கையில், “ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியே கொலைக்குத் தூண்ட முக்கிய காரணமாக உள்ளது. அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒடுக்கவே கொலை செய்யப்பட்டார். இதற்காக 6 மாதங்கள் திட்டமிட்டு ‘ரெக்கி ஆப்ரேஷன்’ நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு மொத்தமாக ரூ.10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அஸ்வதாமன், சம்போ செந்தில், ரவுடி ஆற்காடு சுரேஷ் ஆகியோருடனான முன் விரோதங்களும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை போலீசாரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

Advertisment

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் சிறையில் உள்ள 27 பேருக்கும் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைக் கொடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சிறையில் உள்ளவர்களுக்கு பென்டிரைவ் வடிவில் குற்றப்பத்திரிக்கையை வழங்க போலீசார் முடிவெடுத்தனர். ஆனால் சிறையில் உள்ளவர்கள் குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்தனர். சிறையில் மின்னணு பொருட்களைப் பயன்படுத்த முடியாது என்பதால் குற்றவாளிகள் தங்களுக்குக் கொடுக்கப்படும் குற்றப்பத்திரிக்கையைப் படிக்க முடியாது எனக் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மொத்தம் 5 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையைச் சிறையில் உள்ள 28 பேருக்கும் நகலெடுத்துக் கொடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவாகும், இதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் காகிதங்கள் அச்சடிக்கப்படும் என போலீசார் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனையடுத்து கைதான 27 பேரின் நீதிமன்ற காவலை நவம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு எழும்பூர் 5வது நீதிபதி முன்பு இன்று (14.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட 27 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 27 பேரிடமும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையின் நகல் ஒப்படைக்கப்பட்டது. அதோடு 27 பேரின் நீதிமன்ற காவலும் நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் குறுக்கு விசாரணை மேற்கொள்ள இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

amstrong bsp police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe