பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் தான், ‘இந்த வழக்கைச் செம்பியம் காவல்துறையினர்  நியாயமாக விசாரிக்கவில்லை’ எனக் கூறி இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் ஆம்ஸ்ட்ராங் உடைய சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சிக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகம் எழுந்து வரும் நிலையில் மாநில காவல்துறை இந்த வழக்கைச் சுதந்திரமாக விசாரிக்க முடியாது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய இந்த சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

அவர்களைக் கைது செய்வதற்கு ஒரு முழுமையான நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் அமர்வில் இன்று (03.07.2025) விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நிறையப் பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை உரிய முறையில் காவல்துறை விசாரிக்கவில்லை. எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்” என வாதிட்டார். 

இதற்கு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜா ஆஜராகி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கில் எந்த இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி இது குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.