Armstrong case  goondas act on 15 more people

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய பெருநகர சென்னை காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களில் 8க்கும் மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள் ஆவர். அதே சமயம் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட சுமார் 200 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் ரவுடிகளான சீசிங் ராஜா மற்றும் சம்போ செந்திலை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Armstrong case  goondas act on 15 more people

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, அருள், ராமு மற்றும் திருமலை உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பெருநகர் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஹரிஹரன், மலர் கொடி, சதீஸ்குமார், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தமன், பொற்கொடி, ராஜேஸ், குமார், செந்தில்குமார், கோபி என 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த கொலை வழக்கு தொடர்பான நிலவரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 90 சதவீதம் விசாரணை முடிவடைந்துவிட்டது. இந்த கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம். அதோடு விரைவில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். குற்றப்பத்திரிகை தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.