
பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஆயுதப்படையில் பணிபுரிந்த சரவணக்குமாருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று (07/05/2022) அவர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே பணியில் இருந்த போது, திடீரென துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்ததே சரவணக்குமாரின் தற்கொலைக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஆன்லைன் சூதாட்டத்தால் ஆயுதப்படைக் காவலர் சரவணக்குமார் தற்கொலை செய்துக் கொண்டது நெஞ்சை உலுக்குவதாகத் தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உயிரைக் கொள்ளும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு உரிய தடைச் சட்டத்தைக் கொண்டு வராதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.