Skip to main content

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை; பணி அழுத்தம் காரணமா? 

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Armed Forces Woman Guard lost her lives in salem

நாமக்கல்லில் ஆயுதப்படை பெண் காவலர் திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என். பாளையத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (33). இவர், நாமக்கல் மாவட்டக் காவல்துறையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்திருந்தார். பின்னர், ஈரோடு மாவட்டக் காவல்துறையில் பணியாற்றியபோது அங்கு உடன் பணியாற்றி வந்த காவலர் சேகர் என்பவரைக் காதலித்து, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

காவலர் சேகர், தற்போது நீலகிரி மாவட்டக் காவல்துறையில் வேலை செய்து வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த வைஷ்ணவி, கடந்த மார்ச் 22ம் தேதிதான் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அதனால் அவர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள லேப்டாப் அறையில், வைஷ்ணவிக்கு பாதுகாவலர் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு பணி முடித்துவிட்டு, கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி காலை வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்தவர், திடீரென்று விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அவரே நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார். பின்னர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 30 ஆம் தேதி காலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணவன், மனைவி இடையே ஏதேனும் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலைப்பளு காரணமா? சக காவலர்கள் அல்லது உயரதிகாரிகள் ஏதேனும் தொந்தரவு செய்தார்களா? எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்