Advertisment

அர்ஜூன் சம்பத் , கருப்பு முருகானந்தம் கைது - பதற்றம் குறையாத கும்பகோணம்

அர்

Advertisment

கும்பகோணத்தில் தடையை மீறி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேல தூண்டில் விநாயகம் பேட்டை சேர்ந்த ராமலிங்கம் கடந்த 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தை கண்டித்து இந்துமக்கள் கட்சி பாஜக உள்ளிட்டவர்கள் இன்று 12 ம் தேதி தஞ்சை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்க கூறியிருந்தனர். அதன்படியே வர்த்தகர்கள் பெரும்பாலானோர் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.

இது குறித்து விசாரித்தோம், "திருபுவனம் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகர செயலாளராக இருந்தவர் ராமலிங்கம்.தொழில் மற்றும் சில பல காரணங்களால் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பிறகு கேட்டரிங் மற்றும் வாடகை பாத்திரம் கொடுத்து வாங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஐந்தாம் தேதி காலை திருபுவனம் பாக்கியநாதன் தெரு பகுதியில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 4 பேர் அங்குள்ள ஆதிதிராவிடர் சமூகத்தினரிடம் மத பிரசங்கம் செய்து வந்தனர். அந்த வழியாக தனது வேலையாட்களை அழைக்க சென்ற ராமலிங்கத்தை நிறுத்தி மதமாற்றம் குறித்தான நோட்டீஸை கொடுத்தனர்.

Advertisment

அதனை தொடர்ந்து ராமலிங்கத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியது. ஒரு கட்டத்தில் ராமலிங்கம் அத்துமீறி இஸ்லாமியர் ஒருவரின் தலையில் இருந்த குல்லாவை எடுத்து தனது தலையில் போட்டு கொண்டதோடு பக்கத்திலிருந்த வீட்டில் புகுந்து இந்துக்களின் விபூதியை எடுத்து வந்து அந்த இஸ்லாமியரின் நெற்றியில் பூசி விட்டு கிளம்பினார்.

வேலைகளை முடித்துக்கொண்டு கடையை அடைத்துவிட்டு தனது மகன் ஷ்யாம் சுந்தருடன் வீட்டிற்கு சென்றிருந்தார். இரவு வீடு திரும்பிய போது ஆட்டோவை வழிமறித்த மர்ம கும்பல் ராமலிங்கத்தின் கைகளை வெட்டினர். இதில் படுகாயமடைந்த ராமலிங்கம் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர். அதோடு கொலைக்கு பயன்படுத்திய காரின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர் .

ராமலிங்கத்தின் இறப்பு குறித்து அவரது மகன் ஷ்யாம் சுந்தர் கூறுகையில், "காரில் வந்தவர்கள் என்னை வெட்ட முயற்சி பண்ணினாங்க. அதை தடுத்த எங்கப்பா கை இரண்டையும் வெட்டுனாங்க. கடுமையான ரத்தம் வெளியாகிடுச்சு. பிறகு சுகம் மருத்துவமனைக்கு கொண்டு போனோம். அவங்க பார்க்க மறுத்துட்டாங்க. பிறகு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனோம். அவங்க கடமைக்கு கட்டுப்போட்டு தஞ்சாவூருக்கு அனுப்பிட்டாங்க. இங்கேயே சரியான வைத்தியம் பார்த்திருந்தா காப்பாற்றியிருக்க முடியும். அதோட எங்க அப்பா கடைசியா," எல்லாம் நம்ம சொந்தகாரங்க, தெரிஞ்சவங்கதான்னு சொன்னாரு" என்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை வந்து நேரடியாக சந்தித்துவிட்டு மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என காட்டமாக அறிவித்து விட்டு சென்றார்.

இந்த நிலையில் இன்று இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் தஞ்சை மாவட்டம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். கும்பகோணம் காந்தி பூங்காவில் இருந்து பேரணியாக புறப்படுவது என முடிவு செய்திருந்தனர். இதற்கு முன்னெச்சரிக்கையாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததால் திட்டத்தை மாற்றி மகாமகக் குளம் அருகே உள்ள வீரசைவ மடத்தில் இருந்து 150 பேர் கொண்ட கூட்டத்தினர் பேரணியாக புறப்பட்டு வந்தனர். அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதற்கு இடையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த கருப்பு முருகானந்தத்தை மன்னார்குடியிலேயே முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். அதேபோல் திருபுவனம் சென்று ராமலிங்கத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செட்டி மண்டபத்திலேயே கைது செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் பரபரப்பும், பதற்றமும் குறையவில்லை.

Arjunsampath karuppu muruganantham Kumbakonam
இதையும் படியுங்கள்
Subscribe