Ariyalur - house demolished - ADMK

Advertisment

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது புளியங்குழிகிராமம். இந்த கிராமத்தைசேர்ந்தவர் பாண்டியன். நாற்பதாண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு வீடு பாண்டியனுக்கும் கிடைத்தது. இந்த வீட்டில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். ஆனால் வீடு மிகவும் பழமையான காரணத்தால் ஆங்காங்கே விரிசல் விட்டு வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பாண்டியன் அந்த வீட்டை புனரமைப்பு செய்வதற்காக தனது உறவினர் கருப்புசாமி மற்றும்மேலும் சிலரை வைத்து வேலை செய்து கொண்டிருந்தார். இன்று அந்த வீடு திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிக்கி பாண்டியன், கருப்புசாமி இருவரும் உயிரிழந்தனர். அவர்களுடன் வேலை செய்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அரசு ஆண்டுதோறும் இந்திரா நினைவு குடியிருப்பு பசுமை வீடு என பல்வேறு திட்டங்களை போட்டு நிதி ஒதுக்கீடு செய்து புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஆனால் எம்ஜிஆர் காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் தமிழகம் முழுவதும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அந்த வீடுகளை புனரமைப்பு செய்வதற்கு அரசுநிதி ஒதுக்கீடு செய்து பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக அரசு கட்டிக்கொடுத்த அந்த வீட்டில் இப்போது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இனி எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கக் கூடாது,அந்த வீடுகளை புனரமைப்பு செய்ய அதிமுக அரசு முன்வருமா? என்று கேட்கிறார்கள் பயனாளிகள்.