பருவ கால மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்க நீர் மேலாண்மை செய்ய வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இதய வடிவில் நின்று பள்ளி மாணவிகள் சாதனை.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பருவகால மாற்றங்களால் வரும் பாதிப்பைத் தடுக்கும் வகையில் நீர் மேலாண்மை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இதய வடிவில் நின்று சாதனை செய்துள்ளனர்.

நீர் தான் ஒட்டுமொத்த உலகின் உயிரினங்களின் இயக்கத்திற்கு ஆதாரம். எனவே தான் ஐயன் திருவள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று சொன்னார். அதன் வழியே அவர் கூற்றுப்படி பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு மூலாதாரமாக இருக்கும் நீரைச் சேமித்து வைக்கவும், நீர்மேலாண்மையில் ஒவ்வொரு தனி மனிதனும் தன் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisment

ariyalur district senthurai govt girls higher secondary school students record

மனித உடலில் இதயத்தின் பங்கு பெரிதாகும். இதயமே ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் ஆதாரம். எனவே இதயம் வேலை செய்தால் தான் இதயத் துடிப்பை வைத்து மனித உயிர் இருக்கிறது என அறிய முடிகிறது. இதயத்துடிப்பு நின்று விட்டால் உயிர் பிரிந்து பிணம் என்று தான் சொல்வார்கள். எனவே தான் இந்த உலகம் தன் இயல்பான பணிகளை செய்ய நீர் இன்றியமையாத ஒன்று என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும்.

Advertisment

அவ்வாறு உணர்ந்து நீரை முறையாக சேமிக்காவிட்டால் கடுமையான வரட்சி, பஞ்சம் ஏற்பட்டு தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு உற்பத்தி கேள்விக்குறியாகும், குடிக்க நீரின்றி கால்நடைகள் பாதிக்கப்படும் சூழல் வரும்.

எனவே இந்த நிலையை நாம் தவிர்க்க வேண்டுமானால் நீரைச் சேமித்து வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும் இது ஒவ்வொருவரின் கடமை என்பதனை உணர வேண்டும். மேலும் ஏரி குளங்களை நீர் நிலைகளை பாதுகாத்து வைக்க ஒவ்வொரு தனி மனிதனும் தன்முனைப்பு காட்ட வேண்டும். அதே போல உலக இயக்கத்திற்கு நீரே ஆதாரம் என்பதனையும் உணர வேண்டும்.

பருவ நிலை மாற்றங்களால் பனிப்பாறை உருகி வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுத்து நிறுத்த நீரைச் சேமித்து வைக்க நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். அத்தகைய நீர் நிலைகளை காக்க ஏரி குளங்களில் அதிக பிராண வாயுவை வெளியிடக் கூடிய மரங்களான அத்தி, ஆலமரம், அரச மரம், உதயம் மரம், பூவரசு, வேம்பு, பயன் தரும் பல மரங்களான நாவல், கொடுக்காப்புளி, இலந்தை, தேத்தான்கொட்டை மரம் உள்ளிட்ட மரங்களை வைத்து பராமரிக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சிக்கு இதய வடிவம் தந்து நீர் நிலை ஆர்வலர் தங்க சண்முக சுந்தரம் பள்ளி மாணவர்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஆதிரை, உதவி தலைமை ஆசிரியை மணிமேகலை உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.