லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி; கையும் களவுமாக பிடித்த போலீசார் 

ariyalur district rural development women authority issue 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர் அரசுத்திட்டப் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரராகவும் உள்ளார். தற்போது இவர் ஊரக வளர்ச்சித் துறையில் நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களில் உலர் களம் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்தப் பணிகளைச் செய்து முடித்து இதற்கான தொகையைப் பெறுவதற்காக தனக்கு இரண்டு சதவீத கமிஷன் பணம் தர வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறையின் கோட்ட அதிகாரியாகப் பணி செய்து வரும் வஹிதா பானு என்ற பெண் அதிகாரி கராராக மணிமாறனிடம் பணம் கேட்டுள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மணிமாறன் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி நேற்று கமிஷன் தொகையாக ரூபாய் 30 ஆயிரம் பணம் தருவதாகவும் அதைப் பெற்றுக் கொள்வதற்கு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதிக்கு வருமாறு மணிமாறன் வஹிதா பானுவுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி வஹிதா பானு அந்த இடத்திற்கு நேரில் சென்று மணிமாறனிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தைப் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வஹிதா பானுவை லஞ்ச பணத்துடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாகஅலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று நீண்ட நேரம்விசாரணை நடத்தியுள்ளனர். ஒரு பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி உள்ள சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ariyalur Bribe
இதையும் படியுங்கள்
Subscribe