arivoli

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள ஹனீபா காலனியை சேர்ந்தவர் டாக்டர் அ.அறிவொளி. தமிழறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளருமான இவர் சிறந்த பட்டிமன்ற நடுவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.

Advertisment

1936ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தார் அறவொளி. பள்ளிப்படிப்பை நாகப்பட்டினத்தில் படித்தார். கல்லூரி படிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பின்னா் அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியா் பணியாற்றி வந்த இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதன்பிறகு திருச்சியில் நிரந்தமாக தங்கினார். வித்துவான் மற்றும் தமிழில் எம்.ஏ.வரை படித்திருந்த காரணத்தால் 1956ம் ஆண்டுகளில் இருந்து இலக்கிய கூட்டங்களில் பேச ஆரம்பித்தார்.

Advertisment

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற நடுவராகவும் பேசி வருகிறார். இவரது பட்டிமன்றங்கள் தமிழகம் தாண்டி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்களில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா, பாரிஸ், குவைத், செஷல்ஸ் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் நடந்துள்ளது.

டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று முறை மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை கொண்டு சென்ற இவர் புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

Advertisment

திருக்கோவில்கள் வரிசைகள் என்ற தலைப்பில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பழமையும், பெருமையும் கொண்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு நேரில் சென்று அதன் வரலாறுகளையும், சிறப்புக்களையும் ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும் 120-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

திருச்சி கம்பன் கழகத்தில் ஆய்வுரை திலகம் என்ற பட்டம் மற்றும் கபிலவாணர் விருது பெற்றவர் ஆவார். 1986-ம் ஆண்டு வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சிக்கல் ஆகும். தமிழ்த் தொண்டாற்றும் பொருட்டு திருச்சியில் வசித்து வந்தார்.

மும்பை தமிழ்ச்சங்கம் தமிழ் சங்கத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டாக்டர் அ.அறிவொளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதி சடங்கு திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் அருகே உள்ள ஹனீபா காலனியில் இருந்து இன்று மாலை 3 மணியளவில் தொடங்குகிறது.