/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arivoli 450.jpg)
பட்டிமன்ற, வழக்காடு மன்றங்கள் மூலம் உலகத் தமிழர்கள் மத்தியில் புகழ்பெற்ற தமிழறிஞர் அறிவொளி உடல்நலக் குறைவால் நேற்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவரது மறைவுச்செய்தி உலகத் தமிழர்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உடலுக்கு தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள ஹனிபா காலனியில் இருக்கும் அவரது இல்லத்திலிருந்து, இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் புறப்பட இருக்கிறது.
இரங்கல் செய்திகள்;
அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்;
தனக்கென்று ஒரு தனிப் பாணியை அமைத்துக் கொண்டு பேசிவந்த சொற்பொழிவாளர் அறிவொளி மறைந்தார். அவருடன் நட்புறவு கொண்டு பழகக் கிடைத்த பாக்கியம் என்னுடையது. ஸ்ரீவித்யா உபாசகர். ஓயாமல் மந்திர ஜபம் செய்பவர். மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட. அமுதசுரபியைத் தம் சிறுகதைகளாலும் கட்டுரைகளாலும் அலங்கரித்தவர்.
பேராசிரியர் ராதாகிருஷ்ணன் பரம்பரையின் ஒரு முக்கியமான விழுது விழுந்துவிட்டது. அன்பு மயமான ஓர் அரிய ஆன்மிக அறிஞரைத் தமிழுலகம் இழந்துவிட்டது. அவரது மேடைத்தமிழால் கவரப்பட்ட பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் அவரை என்றும் தங்கள் நினைவில் போற்றுவார்கள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்( நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியர்) ;
மேடைத் தமிழுக்கு மேன்மை செய்துவந்த ’நகைச்சுவைத் தென்றல்’ பேராசிரியர் அறிவொளி மறைந்தார் என்ற தகவல் பெரும் வருத்தத்தைத் தருகிறது.
எங்கள் பகுதியைச் சேர்ந்த தமிழ்முனி அவர். நாகை அருகே இருக்கும் சிக்கல்தான் அவரது ஊர். தி.மு.க. குடும்பம் . என் மாணவப் பருவத்தில் அவரது பட்டிமன்றங்களைக் கேட்டு கிறுகிறுத்துப் போயிருக்கிறேன். சத்தியசீலன், அறிவொளி, அ.வா.ராஜகோபாலன், பூம்புகார் ஜெகந்நாதன், செல்வகணபதி, நமச்சிவாயம் என அப்போது மேடைகளில் அணிவகுத்து வந்த அறிஞர் பெருமக்களின் தமிழ்மழையில் நனைந்த அந்த மதிப்பான நாட்கள், நினைவை நனைக்கின்றன. இந்தப் பட்டியலில் எங்கள் ஆசான்களான நகைச்சுவை நாவலர் இரெ.சண்முகவடிவேல், கவிக்கோ ஞானச்செல்வன் போன்றோரும் இடம்பெற்றனர். பின்னாளில் அவர் பங்கேற்ற நிகழ்சிகளிலும் பங்கேற்கும் வாய்பையும் நான் பெற்றிருக்கிறேன்.
அதுபோன்ற நாட்கள் இனி திரும்பி வரப்போவதில்லை.
அறிவொளியின் அறிவார்ந்த தெளிந்தகுரலைச் செவிமடுக்காத தமிழ்க் காதுகள் இருக்கமுடியாது. கவிக்கோ அப்துல்ரகுமான் மீது அளப்பரிய பற்றுகொண்டவர் அவர். தான் எடுத்த திரைப்படத்தில் , கவிக்கோவை அடம்பிடித்துப் பாட்டெழுத வைத்த பெருமையும் அவருக்கு உண்டு. ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.
தமிழர்களை மகிழ்வித்துவந்த அந்தத் தமிழருவி ஓய்ந்துவிட்டது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)