Skip to main content

“அரிசிக்கொம்பன் யானை ஆரோக்கியமாக உள்ளது” - வனத்துறை

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Arisikkomban elephant is healthy Forest Department

 

தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகுந்த காட்டு யானை அரிசிக்கொம்பன் வனத்துறையினருக்குப் போக்கு காட்டி வந்த நிலையில் வனத்துறையின் தொடர் முயற்சியின் பலனாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து அரிசிக்கொம்பன் யானை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், மேல்கோதையாறு வனச்சரகத்திற்குட்பட்ட குட்டியார் அணை அருகே அடர்ந்த வனப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி விடப்பட்டது. இதையடுத்து அரிசிக்கொம்பன் யானை நிபுணர் குழுவின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் வனத்துறை சார்பில் அரிசிக்கொம்பனின் தற்போதைய நிலை பற்றி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் களக்காடு கோட்டத்தின் துணை இயக்குநர், சூழலியலாளர் மற்றும் முன் கள பணியாளர்கள் குழுவினருடன் மேல்கோதையாறு பகுதியில் அரிசிக்கொம்பன் யானையைக் கண்காணித்தனர். அப்போது அரிசிக்கொம்பன் யானை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டறிந்தனர். உணவு மற்றும் தண்ணீர் நன்றாக உட்கொள்வதை நிபுணர் குழு கண்டறிந்தனர்.

 

மேலும் ரேடியோ காலரில் இருந்து பெறப்படும் சிக்னல் மூலம் யானையின் நடமாட்டம் தொடர்ந்து களப்பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரிசிக்கொம்பன் இருக்கும் இடத்தில் பிற யானைக்கூட்டங்கள் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டது. அரிசிக்கொம்பன் யானையினை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டு 75 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது இரண்டாம் வசிப்பிடத்தில் ஆரோக்கியமாக காணப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்