/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_174.jpg)
விழுப்புரம் அருகே ப.வில்லியனூர், ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில்வசித்து வருபவர் ஹரி கிருஷ்ணன்(38). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ்(45). இவர் தனது வீட்டுக்கு அருகில் பூவரசு மரம் வைத்து வளர்த்துள்ளார். இந்த மரத்தின் கிளைகள் நீண்டுவளர்ந்து ஹரிகிருஷ்ணன் வீட்டு வாசல் வரைசென்றுள்ளது. மேலும் மரத்திலிருந்து காய்ந்த சருகுகள் உதிர்ந்து ஹரிகிருஷ்ணன் வீட்டு பகுதியில் குப்பைகளாகத் தினசரி சிதறிக் கிடந்துள்ளன. இதை தினசரி ஹரி கிருஷ்ணன் மனைவி சிவசங்கரிபெருக்கி சுத்தம் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தங்கள் வீட்டின் பக்கமுள்ள கிளைகளை வெட்டுங்கள் உங்கள் மரத்து இலைகள் எங்கள் வீட்டின் முன்பு விழுந்து குப்பைகள் அதிகரிக்கின்றன எனக் கூறியுள்ளனர். ஆனால் ஆனந்தராஜ் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால் பூவரச மரத்தின் சருகுகள் ஹரி கிருஷ்ணன் வீட்டு வாசலில் ஏராளமாக வந்து விழுந்து குவிந்தன அதோடு காற்றில் மரக்கிளை முறிந்து ஹரி கிருஷ்ணன் வீட்டுக்குச் செல்லும் மின்சார வயர் அறுந்து விழுந்துவிட்டது. இதனால் கோபமடைந்த ஹரிகிருஷ்ணன், ஆனந்தராஜிடம் மரத்தை முழுவதுமாக வெட்டச்சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மடுகரை பகுதியில் ஆனந்தராஜ் மது குடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அப்போது அங்குத் தனது நண்பர்கள் ஆறு பேரை அழைத்துக் கொண்டு சென்ற ஹரிகிருஷ்ணன் ஆனந்தராஜிடம் மரம் வெட்டுவது சம்பந்தமாகத் தட்டிக் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகரிக்க பயந்துபோன ஆனந்தராஜ் வீட்டுக்குத் தப்பி ஓடி வந்தவர் தன்னிடம் ஹரிகிருஷ்ணன் தகராறுக்கு வந்த விஷயத்தை மனைவி விஜயா மற்றும் தனது பிள்ளைகளிடம் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜின் மகன்கள்மற்றும் மனைவி விஜயா ஆகியோர் சேர்ந்து ஹரிகிருஷ்ணனை சரமாரியாகத் தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஹரிகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சை கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ஹரிகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஹரிகிருஷ்ணனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தராஜ், அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்து 4 பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தராஜின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)