
கரோனா வைரஸ் தொற்று மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்ற மார்ச் மாதம் முதல் பல கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன. பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதற்கான முறையான அறிவிப்பு இன்றுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்தும் விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம் அருகில் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வாழ்த்து பேனரில் "அரியர் மாணவர்களின் அரசனே... எந்நன்றி கொன்றார்க்கு உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு... என்ற திருக்குறளை எழுதி, ஐயா எடப்பாடியாரே... நீர் வாழ்க வாழ்க... இப்படிக்கு அரியர் மாணவர்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்த வாழ்த்து பேனரை அப்பகுதியில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.