Skip to main content

“உயிரை விடவா கோவிலுக்குச் செல்கிறோம்?” -மருகும் மாரியம்மன் பக்தர்கள்! 

Published on 30/08/2018 | Edited on 30/08/2018
i

 

“நல்லவேளை  எங்க தலையில் விழலை.. அந்த ஆத்தாதான் எங்களைக் காப்பாத்திட்டா.” என்று நடுக்கத்துடன் பேசிய விருதுநகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் குடும்பத்தினர்.  “உயிரை விடவா கோவிலுக்குச் செல்கிறோம்?” என்று பரிதவிப்புடன் கேட்டனர். 

 

என்ன நடந்தது? யார் காப்பாற்றியது? 

 

ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை வருமானம் கிடைப்பதாக அரசுக்கு கணக்கு காட்டப்படும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் கோவிலை நிர்வகிப்பதும், கண்காணிப்பதும் இந்து அறநிலையத்துறை ஆகும். மற்றபடி, இந்தக் கோவிலானது பரம்பரைப் பூசாரிகளின் (அறங்காவலர்கள்) சொத்தாகக் கருதப்படுகிறது. கோவில் உண்டியல் வருமானத்தைத் தவிர, மொட்டை போடுதல், சிறப்பு தரிசனக் கட்டணம் போன்ற பிற வருமானத்தில், மூன்றில் ஒரு பங்கை பூசாரிகளுக்குத் தந்துவிட வேண்டும் என, வழக்கின் முடிவில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. 

 

i

 

இந்தக் கோவிலுக்கு, காணிக்கை முடி ஏலத்தின் மூலமே வருடத்துக்கு ரூ.3 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.  அந்த முடி மூட்டைகளைத் திருடிய வழக்கில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி கைதானதெல்லாம் நடந்திருக்கிறது.  ஒருபுறம் அலட்சியமாக செயல்படும் அறநிலையத்துறை, இன்னொருபுறம் சுயநலத்துடன் பொறுப்பின்றி நடந்துகொள்ளும் அறங்காவலர்கள் என்ற நிலையில், கோவிலின் பராமரிப்புப் பணிகள் எவ்விதத்தில் நடந்து வருகின்றன  என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்த வாரத்தில் நடந்த சம்பவம். 

 

தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதியிலிருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்து குவியும் இந்தக் கோவிலில், கடந்த 27-ஆம் தேதி,  திடீரென்று கிழக்குத் தலைவாசல் மேற்கூரை, பெரும் சத்தத்துடன் பெயர்ந்து விழுந்தது. அந்த நேரத்தில், சற்று தள்ளி நின்றிருக்கிறார்கள் விருதுநகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் குடும்பத்தினர். மேற்கூரை மோசமாக இருந்த நிலையில், வெடிப்புக்களைக் கண்டுகொள்ளாமல், வர்ணம் மட்டும் பூசியிருந்ததால், இது நிகழ்ந்திருக்கிறது. திங்கட்கிழமை என்பதால் கூட்டம் குறைவாக இருந்திருக்கிறது. ஒருநாள் முன்னதாக, பக்தர்கள் கூட்டம் அலைமோதும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இது நடந்திருந்தால், பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும். 

 

கோவிலின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற சுவர் வெடிப்புக்கள் உள்ளன. அதனால், கோவில் பராமரிப்பு பணிகள்,  பக்தர்களின் உயிர் மீதான அக்கறையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்