
திருச்சி ரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரது உதவியுடன் சாக்கடையிலிருந்து அரை நிர்வாணத்துடன் கிடந்த உடலை மீட்டனர்.
பின் ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்த உடல் அருகே பாதி நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பழைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் உள்ளே மது பாட்டில்கள், ஆணுறைகள் காணப்பட்டதால், இங்கு பல சமூக விரோத செயல்கள் நடைபெறுவது தெரியவந்தது. இறந்த நபருக்கு 50 முதல் 60 வயது இருக்கலாம் எனவும், இவர் ரஞ்சிதபுரம் பகுதியில் சிறிது நாட்களாக சுற்றிவந்ததாகவும் தெரிகிறது. மேலும், பாழடைந்த இந்தக் கட்டடத்தில்தான் இவரது உடைமைகள், செருப்புகள் போன்றவை இருந்துள்ளன.

சில மாதங்களாக ரஞ்சிதபுரம் பகுதியில் சில இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை வம்புக்கு இழுத்ததாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கஞ்சா வியாபாரிகள் ஜிகார்னர் மைதானத்திலும், இந்த பாழடைந்த மண்டபத்திலும் வைத்துதான் கஞ்சா விற்றதாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த முதியவர் இந்தப் பாழடைந்த மண்டபத்தில் தங்கியது கஞ்சா வியாபாரிகளுக்கு இடையூறாக இருந்திருக்கலாம் எனவும், இதனால் முதியவரை அந்த கஞ்சா வியாபாரிகள் சாக்கடையில் தள்ளி கொலை செய்திருக்கலாம் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் முதியவர் மழை பெய்த அன்று சாக்கடையில் தவறி விழுந்திருக்கலாம் என போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. ஆனால் அப்பகுதி பொதுமக்கள் கஞ்சா விற்கும் வியாபாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணத்தினால் இறந்தாரா என கே.கே. நகர் போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். இறந்தவரின் உடலைக் கைப்பற்றிய கே.கே. நகர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.