/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arch-art.jpg)
கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.
இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது. இதனையடுத்து சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகளைமே 10 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த இடத்தில் பழங்கால கட்டடங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தொல்லியல்துறை இணை இயக்குநர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். பார்வதிபுரம் கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுரம் கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)