Skip to main content

“கோவில் சொத்துக்களை ஒரு சாதி ஆக்கிரமிக்க முயற்சி” – அர்ச்சகர் பயிற்சி பெற்ற சங்கத் தலைவர்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Archakar trained association leader said thiruvannamalai temple issue

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெரும் 100க்கும் அதிகமான மாணவர்களுக்கு, தமிழ் முறைப்படியான குடமுழுக்கு, தமிழ் வேள்விகள், ஒவ்வொரு கடவுளுக்குமான தமிழ் வழிபாட்டு முறைகள், அர்ச்சனைக்கான போற்றி நூல்கள் போன்றவற்றை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன், கோவில் இணை ஆணையர் முன்னிலையில் வழங்கினர்.

 

அதன்பின் நம்மிடம் பேசியவர், “தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடிவிடுவோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்து வழிபாட்டாளர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புதான் அண்ணாமலையின் இந்த அறிவிப்புக்கு காரணம். பழனி கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தவுடனே அறநிலையத்துறையை இழுத்து மூடுவோம் என்று அண்ணாமலை அறிவித்திருப்பது இதில் குறிப்பிடத்தக்கது.

 

பார்ப்பனரல்லாத மற்ற சாதியினர் யாரும் அர்ச்சகராகக்கூடாது என்பது மட்டுமல்ல, சிதம்பரம் கோவிலைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கோயில்களையும் தனிப்பட்ட சொத்தாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதும், திருக்கோவில்களில் இருந்து தமிழையும், தமிழர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பதும்தான் இவர்களது நோக்கம்.

 

2009 – 2023 ஆம் ஆண்டுகளில் இந்து அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சந்தித்து ஆகமக் கோவில்களில் எங்களை பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சந்தித்து வருகிறோம். இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி போன்ற அனைத்து அமைப்புகளையும் சந்தித்து ஆதரவு கேட்டோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. கிராம கோவில்களில் மட்டும்தான் நீங்கள் பூஜை செய்ய வேண்டும் பரம்பரையாக உள்ள கோவில்களில் அவர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்றார்கள்.

 

இந்து முன்னணி ராமகோபாலனை சந்திக்கும்போது உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். பணமோ, வேலையோ உங்களுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன். இதையெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள் என்றார். இந்து முன்னணியால் கொலை மிரட்டலுக்கு ஆளானேன்; தாக்கப்பட்டேன்; இப்போதும் தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டுதான் இருக்கிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம், தமிழ்நாடு அரசு நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களுக்காக கருவறை தீண்டாமை முடிவு கட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும். திருச்சி குமார வயலூர் கோயிலில் திமுக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களைப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் இந்து வழிபாட்டாளர் சங்கம். 

 

கோவில்களும், கோவில்களின் சொத்துக்களும் இந்து மக்கள் அனைவருக்கும் சொந்தமானவை. அவற்றை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் அபகரிக்கும் நோக்கத்துடன்தான் இந்து அறநிலையத்துறையை ஒழிக்க முயல்கின்றனர். கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதனால்தான் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளார். ஆறு அர்ச்சகர் பயிற்சி மையங்களையும் தொடங்கி வைத்துள்ளார். அரசின் இந்த முயற்சிகள் அனைத்துக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும்.

 

பக்தி என்ற போர்வையில் சாதிய ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்த துடிக்கும் சனாதன சக்திகளின் முயற்சியைத் தடுப்பதற்கு அர்ச்சகர் பயிற்சி முடித்து பணி நியமனம் கிடைக்காமல் இருக்கும் 16 மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கி, சமூகநீதியை நிலைநாட்டவும், தமிழ் வழிப்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ரங்கநாதன்.

 

 

சார்ந்த செய்திகள்