/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3238.jpg)
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 26ஆம் தேதி திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார்கள். அப்போது கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் தலைவர் காசியண்ணன் தலைமையில் வந்த விவசாயிகள் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
பிறகு அவர் கூறும்போது, தற்போது கீழ்பவானி பாசன பகுதியில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அது இன்று 25 ந் தேதி முதல் முறை வைத்து நீர் வழங்க முடிசெய்யப் பட்டுள்ளதாக அறிகிறோம். பாசன விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். பவானிசாகர் அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையிலும் மேல் பகுதியிலேயே நெல் நடவு வேலைகள் முடிவு பெறாத நிலையிலும் முறை வைத்து நீர் வழங்குவது தவறான முடிவாகும். இதை கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சார்பில் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக முறை வைத்து நீர் வழங்குவதை அமல் படுத்தாமல் எல்லா மதகுகளுக்கும் உரிய நீரை முழுமையாக வழங்கி விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்றனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் பட்டின மக்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக் கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோஷம் எழுப்பியவாறு வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், கோஷம் போடாமல் உங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை ஆட்சியரிடம் கொடுங்கள் என்றனர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர்.
இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த மாக்கினாங்குகோம்பை, அரசூர், தட்டாம்புதூர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம், அருணாச்சலம் உள்பட 12 பேர் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது; “அரசூர் ராஜவீதியில் குடியிருக்கும் ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் நாங்கள் பல தவணைகளாக 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளோம். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நபர் எலச்சீட்டு பணத்தை எங்களுக்கு தராமல் காலம் தழ்த்தி வருகிறார். இதற்காக நாங்கள் கடன் வாங்கி அவரிடம் பணத்தை கொடுத்தோம். அவர் கூறியபடி பணம் தராததால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)