Advertisment

நீர்நிலைகளை சீரமைக்கும் இளைஞர்கள்... ஒரு நாள் செலவை நிதியாக கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரிகள்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் ஆய்வு செய்த மத்திய ஆய்வுக்குழு நீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களை கண்டறிந்துள்ளது. தற்போது ஜல்சக்தி அபியான் என்ற துறையை அமைத்து மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisment

 AR Rahman Sisters who funded the cost of a day to develop water bodies

ஒவ்வொரு வருடமும் நீர்நிலைகளை அரசாங்கம் மராமத்து செய்யும் என்று காத்திருந்த விவசாயிகள் 30, 40, வருடங்களாக சீரமைக்காமல் மண் மேடுகளாகிப்போனது குளம், குட்டை, ஏரிகள், வரத்து வாய்க்கால்கள் காணாமலே போனது. மறு பக்கம் ஆக்கிரமிப்புகள் பெருகிப்போனது.

Advertisment

தந்தையின்விவசாயத்தில் படித்து இன்று பல நாடுகளிலும், பல ஊர்களிலும் பல துறைகளிலும் பணியாற்றும் இளைஞர்கள் மீண்டும் நம்ம ஊரு எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்த்தபோது.. நாம் விளையாடியகுளம், குட்டைகள் காணாமல் போகும், விவசாயம் அழிந்து போகும், வயதான காலத்தில் சொந்த ஊருக்கு வரும்போது குடிக்க தண்ணீர் இருக்காதே.. நம் குழந்தைகளுக்கு தண்ணீரை எப்படி கொடுக்க முடியும் என்ற எதிர்காலம் அவர்களின் மனத்திரையில் வந்து வந்து போனது..

அதன் பலன் பல கிராம இளைஞர்களும் இணைந்தார்கள் சமூக வலைதளங்களில் கூடிப் பேசினார்கள். சொந்த ஊர்களுக்கு போவோம்.. நீர்நிலைகளை சீரமைப்போம், மழை நீரை சேமிப்போம், நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்ற முடிவோடு கிராமங்களை நோக்கி வந்தார்கள்.இந்த முடிவுகளுக்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் காட்டாற்றின் குறுக்கே மண்ணால் அணைகட்டி குளங்களுக்கு தண்ணீரை கொண்டு போனார்கள் உள்ளூர் இளைஞர்கள்.

water

வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தஇளைஞர்கள் முதலில் தஞ்சை மாவட்டம் களத்தூரில் சோதனையாக 2 பெரிய ஏரிகளை சீரமைத்தனர். 15 கி.மீ. வரத்து வாய்க்காலை சீரமைத்தனர். தண்ணீரை நிரப்பினார்கள். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.அடுத்து புதுக்கோட்டை கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, மாங்காடு, வடகாடு, நெடுவாசல் என்று பல கிராமங்களிலும் இந்த பணிகள் தொடங்கியது. அத்தனையும் சொந்த பணம், இளைஞர்களின் இந்தமுயற்சியை பார்த்து மூதாட்டி முதல் பள்ளி குழந்தைகள் வரை தங்கள் சேமிப்பை கொடுத்தார்கள். கொத்தமங்கலத்தில் 103 வது நாளாக தொடர்ந்து வேலைகள் நடக்கிறது. இளைஞர்கள் சீரமைத்த குளங்களுக்கு சில நாட்கள் பெய்த சிறிய மழை தண்ணீர் தேங்கத்தொடங்கியதும் இளைஞர்கள் மகிழ்ந்தனர். இதைப் பார்த்த நடிகர் விவேக் டுவிட்டரில் வாழ்த்து கூறினார்.

water

அதேபோல பேராவூரணியில் 550 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய ஏரியை கைஃபா நண்பர்கள் சீரமைப்பு பணியை தொடங்கி தொடர்ந்து செய்து வருகிறார்கள். பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே வரத்து வாய்க்காலை சீரமைத்துவிட்டதால் நேற்று வந்த கல்லணை தண்ணீர் பெரிய குளத்திற்கு வரத்தொடங்கியது. பல வருடங்களுக்கு பிறகு பெரிய குளம் ஏரிக்கு தண்ணீர் வருவதைப் பார்த்து ஆனந்தப்பட்ட கை.ஃபா இளைஞர்கள் மலர் தூவி காவிரித் தாயை வரவேற்ற வாய்க்காலில் அழைத்துச் சென்று ஏரியில் விட்டனர். இந்த ஏரியை சீரமைக்க அக்கம் பக்கத்து கிராமங்களும் போட்டி போட்டு அள்ளிக் கொடுத்தார்கள் நிதியை. இதைக் கேள்விப்பட்ட பலரும் வந்து பார்த்தார்கள். நிதி கொடுத்தார்கள்.

water

அப்படித்தான் கனடா நாட்டின் பேராசியராக உள்ள பிராங்க் 30 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் பற்றிய ஆய்வுக்கு வந்து தமிழ் மீதும் உள்ள பற்றால் தமிழைக் கற்றுக் கொண்டார். ஆண்டுக்கு சில முறை குடும்பத்துடன் வந்து தமிழ்நாட்டை சுற்றி வருவார். கடந்த மாதம் வந்த போது பேராவூரணி பெரிய குளம் ஏரி சீரமைக்கப்படுவதை வந்து பார்த்தவர். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் இருந்த குளங்கள் இன்று காணவில்லை. இளைஞர்களின் முயற்சியை வரவேற்கிறேன். இதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார். சென்னைக்கு திரும்பியவர் சில நாட்களுக்கு முன்பு நாடியம் கிராமத்தில் சீரமைக்கப்பட்டு வரும் நீர்நிலைகளுக்காக தன்னிடம் இருந்த ரூ. 10 ஆயிரத்தை வழங்கினார்.

அதேபோல பேராவூரணி பெரிய ஏரியை பார்த்துச் சென்ற கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கரையை பலப்படுத்தவும், தண்ணீரை சுத்தப்படுத்தவுமாக 25 ஆயிரம் வெட்டி வேர் நாற்றுகளை தன் சொந்த செலவில் அனுப்புவதாக கூறியுள்ளார்.

இப்படி இளைஞர்களின் முயற்சிக்கு தன்னார்வலர்கள் பலரும் உதவிகள் செய்து வரும் நிலையில்தான் அதே ஆர்வத்தோடு கைஃபா இளைஞர்கள் தங்களின் அடுத்த பணியாக தஞ்சை மாவட்டம் நாடியம் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்க 3 வருடங்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து கிராம வளர்ச்சியை மீட்டுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கானபணிகளையும் தொடங்கிவிட்டனர். இந்த தகவல் நக்கீரன் இணையத்தில் வெளியான நிலையில் கிராமங்கள் தோறும் பரவியது. கள்ளக்குறிச்சி மாவட்ட மேல நாரியப்பனூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 532 பேர் கையெழுத்திட்டு பாராட்டு மடல் அனுப்பினார்கள்.

water

இந்தநிலையில்தான் இசையில் புரட்சி செய்து வரும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரிகள் இஸ்ரத் குவாத்ரே, மற்றும் இசையமைப்பாளர் ரெய்கானா சேகர் ஆகிய இருவரும் தங்களில் ஒரு நாள் செலவு தொகையை நாடியம் கிராமத்தில் நீர்நிலை சீரமைப்பிற்காக வழங்கி உள்ளனர்.

இதனை பெற்றுக் கொண்ட நாடியம் நீர்நிலை மீட்புக்குழுவினர் கூறும்போது.. கோயில் திருவிழாவில் ஆடல், பாடலை நிகழ்ச்சிக்கான செலவைநிறுத்தி குளம், குட்டைகளை சீரமைப்போம் என்று பணிகளை தொடங்கியுள்ளோம். இதைக் கேள்விபட்ட நிலையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரிகள் இருவரும் நாடியம் பெரிய குளம் சீரமைப்பு பணிக்காக தங்களின் ஒரு நாள் செலவு தொகையை வழங்கி உள்ளனர். அவர்களின் எத்தனையோ பணிகளுக்கு இடையே சென்னையிலிருந்து எங்கோ ஒரு கடைக்கோடியில் உள்ள நாடியம் என்கிற கிராமத்தை நோக்கி அவர்களின் பார்வை பட்டுள்ளது. அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காகவும் விவசாய பூமி செழிக்க வேண்டும், விவசாயிகள் வாழவேண்டும் என்று அவர்கள் செய்துள்ள உதவியை மறக்கமாட்டோம்.இப்படி விவசாயம் காக்க, நீர்நிலை காக்க உதவ முன்வரும் அனைவரையும் தலைவணங்கி வரவேற்போம் என்றனர்.

இன்னும் எத்தனையோ கிராமங்களில் குடிதண்ணீருக்காக மணிக்கணக்கில் குழாயடியில் காத்துக்கிடக்கிறார்கள் பெண்கள்.. அந்த பெண்களை நினைத்துப் பார்த்தால் இளைஞர்கள் முன்வந்து நீர்நிலைகளை சீரமைத்து ஒவ்வொரு மழைத்துளியையும் சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்கலாம்.. இளைஞர்களே.. எழுந்து வாருங்கள்..

ar rahman Foundation lands Pudukottai sister water
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe