ADVERTISEMENT

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்; விண்ணப்பிக்க ஜன.30ம் தேதி கடைசி

05:36 PM Jan 16, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது, அரசு மருத்துவமனைகளில் 3200 செவிலியர்களை தற்காலிகமாக, தொகுப்பு ஊதிய அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு நியமித்தது. அவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிச. 30, 2022ம் தேதியுடன், கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தது தமிழக அரசு. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தற்காலிக செவிலியர்களுக்கு அரசின் திடீர் நடவடிக்கை பேரிடியாக இறங்கியது.

இது ஒருபுறம் இருக்க, இனசுழற்சி விதிகளை பின்பற்றவில்லை என்று கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களில் 800 பேர், ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, எஞ்சியுள்ள 2472 கரோனா கால தற்காலிக செவிலியர்கள் தங்களை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நியமிக்கக் கோரியும், காலியிடங்களைப் பொருத்து படிப்படியாக பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஜன. 1ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்களுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுத்தரப்பில், அந்தந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மீண்டும் தற்காலிகமாக செவிலியர்களை அந்தந்த ஊர்களிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், முன்பை விட கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதை போராட்டக்குழுவினர் ஏற்கவில்லை.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட நலவாழ்வு சங்கங்கள் தற்காலிக செவிலியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக பணியாற்ற செவிலியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) வெளியிட்டுள்ளது. அதன்படி, 218 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். செவிலியர் பட்டய படிப்பு / பி.எஸ்சி., நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும (https://Salem.nic.in) வலைத்தளத்தில் (career section) பிரிவில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய ஆவண நகல்களுடன், ''செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய நாட்டாண்மைக் கழக கட்டட வளாகம், சேலம் மாவட்டம் - 636001'' என்ற முகவரிக்கு ஜன. 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமத்தின் (https://nhm.tn.gov.in) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது, சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தை நேரில் அணுகியும் அறிந்து கொள்ளலாம். இத்தகவலை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT