/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2602.jpg)
நடப்பு ஆண்டுக்கான சமூக சேவகர் விருது பெற விரும்புவோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது, தமிழக முதல்வரின் கரங்களால் மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களுக்கு சமூக சேவகர் விருது, பெண்களுக்கான சேவை நிறுவன விருது வழங்கப்பட்டு வருகிறது.
சமூகப் பணியில் ஈடுபடும் இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்துதல், அவர்களின் சவாலான பணியை அங்கீகரித்தல், சமூக பராமரிப்பில் பன்முகத்தன்மை மற்றும் சம வாய்ப்பினை ஊக்குவித்தலை நோக்கமாகக் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, நடப்பு 2022ம் ஆண்டுக்கான சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது குறித்த அறிவிப்பு https://awards.tn.gov.in என்ற அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் தொண்டாற்றி இருக்க வேண்டும். இத்தகைய சமூக சேவகர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருது பெற இணையதளத்தில் பதிவு செய்தவர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண். 126ல் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, வரும் 30.6.2022ம் தேதிக்குள் தங்களது கருத்துருக்களை ஒப்படைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 0427 - 2413213 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)