ADVERTISEMENT

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் புகார்களல்ல! – தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம்

09:09 AM Jan 19, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், புகார்கள் அல்ல என்பதை தெளிவுபடுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தேசிய, சர்வதேச பெண்கள் அமைப்புகள், தேசிய மகளிர் ஆணையத்தின் முயற்சியால், 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு, 2006-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இழப்பீடு கோரியும், வசிப்புரிமை கோரியும், பாதுகாப்பு கோரியும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை ரத்து செய்யக் கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில், பாதுகாப்பு மீறல் மட்டும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடு கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் உரிமையியல் சம்பந்தப்பட்டது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல’ எனக் கூறி, அவற்றைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், மனுதாரர்கள் நிவாரணம் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும், இக்கோரிக்கைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதிபதி, ‘குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், புகார்கள் அல்ல. இதில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பக் கூடாது, நோட்டீஸ் மட்டுமே அனுப்ப வேண்டும். அதுபோல், விண்ணப்பத்தில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பக் கூடாது. விண்ணப்பங்களில் மனதைச் செலுத்தி உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இயந்திரத்தனமாக செயல்படக் கூடாது.’ எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT