Skip to main content

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பம் தொடக்கம்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Application starts for 12th class exam

 

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, கடந்த 19ஆம் தேதி சுமார் 8 லட்சம் மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருந்தார்.

 

கரோனா ஊரடங்கு காரணத்தால் 10, 11, 12ஆம் வகுப்புகளின் செய்முறை தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு 12ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல்முறையாக தசம எண்களில் மதிப்பெண் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் திருப்தி அளிக்கவில்லை என கருதும் மாணவர்கள் தேர்வெழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தேவையில்லை. மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் தேர்வெழுத விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.