Application for environmental clearance for Madurai SIPCOT Industrial Park

தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியைத் திட்டமிடுதல், இயக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் கடந்த 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT - State Industries Promotion Corporation of Tamil Nadu Limited ) நிறுவப்பட்டது. இதன் மூலம் 8 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ - Special Economic Zone) உட்பட 50 தொழில் பூங்காக்களின் வளர்ச்சியை வளர்த்து வருகிறது. அதாவது 24 மாவட்டங்களில் மொத்தம் 48 ஆயிரம் 926.48 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் மதுரை மாவட்டத்தில் சிப்கார்ட் தொழில் பூங்கா அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி மதுரை மேலூர் வட்டம் பூதமங்கலம் வஞ்சி நகரம் மற்றும் கொடுக்கப்பட்டி கிராமங்களில் 278.26 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்கார்ட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ. 68 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த தொழில் பூங்காவில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

அதாவது இதன் மூலம் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்கார்ட் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பித்துள்ளது.