Skip to main content

காட்டாற்று வெள்ளத்தையும் கடந்து சென்று நிவாரணம் வழங்கிய அப்பாவு! (படங்கள்) 

 

நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும், சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருப்பவர் அப்பாவு. ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். தொடக்கத்தில் அரசியல் கட்சியான த.மா.க. மூலம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, பின்னர் தன் சொந்த செல்வாக்கால் சுயேட்சையாகக் களம் கண்டு இரண்டாம் முறை எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வாக்கு எண்ணிக்கை அவருக்குச் சாதகமாக இருந்தும் ‘ஜெ’ ஆட்சியின்போது நூலிழையில் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும் பொறுமை காத்த அப்பாவு, இம்முறை எம்.எல்.ஏ.வாகி தன்னுடைய 69ஆம் வயதில் சட்டப்பேரவையின் தலைவராகியிருக்கிறார்.

 

ஆசிரியர், எம்.எல்.ஏ. என்ற பொறுப்புகளைக் கொண்டாலும், ராதாபுரம் தொகுதியின் இண்டு இடுக்கெல்லாம் இவரது விரல் நுனியில். வானம் பார்த்த பூமியான ராதாபுரம் தொகுதி, குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாகக்கொண்ட பகுதி. இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ ஆனபோது தொகுதி முழுக்க கிராமங்களில் முதன்முதலாக மோட்டார் பம்ப்புடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டியை அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு தணித்தவர். அப்பாவு எம்.எல்.ஏ. அறிமுகப்படுத்திய இப்புதிய திட்டம் பின்னர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுவதற்குக் காரணமாக இருந்தது.

 

இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட, அடைமழையாய் கொட்டித் தீர்க்கிறது. மேலும், இடைநில்லாமல் மழை பொழியும் கன்னியாகுமரியை ஒட்டியிருப்பதால், அம்மாவட்டத்தின் மழையின் தாக்கம் அருகிலுள்ள ராதாபுரம் தொகுதியையும் பதம் பார்த்திருக்கிறது. இதன் காரணமாக ராதாபுரம், பணகுடி சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல கிராமங்களில் கடும் பாதிப்பு. இதனையறிந்த சபாநாயகர் அப்பாவு தன்னோடு சிலரை அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குப் போயிருக்கிறார். அது சமயம் கடும் வெள்ளம் காரணமாக கொமந்தான்குளம் கிராமத்திற்குள் செல்லும் தரைப்பாலத்திலும் தைலம்மாள்புரத்தின் வடக்கு தரைப்பாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டதால், அங்கு செல்ல முடியாத நிலை. 

 

அப்போது அங்கு வந்த சபாநாயகர் அப்பாவுவிடம், “வெள்ளமிருப்பதால் வர வேண்டாம். வடிந்த பின் வாருங்கள்” என்று மக்கள் சொல்லியும், சபாநாயகரோ “நான் எப்படியும் வந்து உங்களை நேரில் பார்ப்பேன். அதற்காகத்தான் வந்துள்ளேன்” என்றவர், அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு ஆபத்தான காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து சென்று, அங்குள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி, ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.

 

அந்தப் பகுதியில் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட லெட்சுமணன் என்பவருக்கு ரூபாய் 5,000 பணம் மற்றும் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார் சபாநாயகர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகள் வழங்கவும், இயற்கை பேரிடர் கால நிவாரண நிதியின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர ஏற்பாடுகளை விரைந்து செய்வதுடன், போர்க்கால அடிப்படையில் அரித்துச் செல்லப்பட்ட கொமந்தான்குளம் சைதம்மாள்புரம் பாலம் புதிதாகக் கட்டப்படும் என்று உறுதியாகச் சொன்னவர், வள்ளியூர் பெரியார் சமத்துவபுரத்தில் ஒழுகும் வீடுகளை ஆய்வுசெய்து உடனடியாகச் சரிசெய்ய உரிய அதிகாரிகளை விரைவுப்படுத்தியிருக்கிறார்.