ADVERTISEMENT

“வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிகொடுக்கப்படும்..” அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

06:18 PM Dec 27, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அதை உடனடியாக நடவடிக்கை எடுக்க ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கான மனுக்களை அளித்து வருகிறார்கள். தமிழக முதல்வர், மக்களின் குறைகளை நிறைவேற்றுவார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 19,116 மனுக்களை பெற்றார். அவர் முதலமைச்சராக பதவியேற்ற ஒரு மாதத்தில் 8 ஆயிரத்து 953 மனுக்களுக்கு ரூ. 41 கோடியில் திட்டங்களையும் நிறைவேற்றி எதிர்க்கட்சிகள், ஓட்டு போடாதவர்களின் பாராட்டை பெற்றார்.

சட்டமன்றத்தில் பட்ஜெட்டை வரவேற்று அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த நல்லாட்சி நடைபெறுவதற்கு அரசு அதிகாரிகளின் கூட்டு முயற்சிதான் காரணம். கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய 4 இடத்தில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர், சிதம்பரம் முக்கிய நகரமாகும் அதனால் கடலூரை மாநகராட்சி ஆகவும், சிதம்பரத்தை பெருநகராட்சி ஆகவும் அரசு அறிவித்துள்ளது. கூடுதல் நிதியை பெற்று மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். சிதம்பரம் நகரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்தவர்களை கடந்த ஆட்சி காலத்தில் மாற்று இடம் கொடுக்காமல் அகற்றிவிட்டனர். எனவே வீடுகள் இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி வீடுகள் கண்டிப்பாக கட்டித் தருவோம். தற்போது இடம் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வரும் தேர்தலில் பொதுமக்கள் நமக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்து தேர்வு செய்யவேண்டும். கடலூர் மாவட்டம் 5 ஆறுகளின் வடிகாலக உள்ளதால் இயற்கை சீற்றத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைகிறார்கள். முதல்வரின் முயற்சியால் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு குழு அமைக்கப்படும்.

சிதம்பரம் தொகுதியில் 1991-ல் போட்டியிட்டு குறைந்தவாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். இந்த தொகுதி மக்கள் என்னை கழிட்டி விட்டுவிட்டார்கள் அதன்பிறகு 96-ல் கலைஞர் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். தொகுதி மக்கள் என்னை கெட்டியாக பிடித்துகொண்டனர். அதிலிருந்து அந்த தொகுதி மக்கள் என்னை விடவில்லை. தொகுதியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். சிதம்பரம் தொகுதி அதிக மக்கள் கூடும் ஒரு சுற்றுலா தளம். இதனை புதுமை நகரமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின், திமுக நகர செயலாளர் செந்தில்குமார், துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட நிர்வாகிகள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT