“கூட்டணி ஆட்சிக்கு அதிமுக பணியாது” - அன்வர் ராஜா கருத்து!

anwar-raja

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள், கூட்டணி ஆட்சி  மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அதில், “எந்த காலத்திலும் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள்.

தனித்து ஆட்சி என்ற கோஷம் தான் தமிழகத்தில் எடுபடும்.  சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை அதிமுக பிடிக்கப் போகிறது என்பதால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சிதான் என பாஜக நிர்ப்பந்தித்தால் அதற்கு அதிமுக பணியாது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கூட்டணிக்குத் தலைமை தாங்கப் போவது அதிமுக தான் இதனை பாஜகா ஏற்கவில்லை என்றால் இரு கட்சிகளுக்குமான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை தமிழ்நாட்டில் காலூன்று துடிப்பது பாஜகவின் எண்ணமாக இருந்தாலும் அது ஒரு போதும் நடக்காது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “ஒருவேளை கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடித்தால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்களை வைத்து பாஜக புதிய திட்டம் போடலாம் என்கிறார்களே” என்ற கேள்விக்கு, “இதுபோன்ற திட்டங்கள் பாஜகவிடம் இருந்தால் அவற்றை அதிமுக தவிடு பொடியாக்கும்” என அன்வர்ராஜா பதில் அளித்துள்ளார். 

admk Alliance anwar raja Assembly Election 2026 b.j.p
இதையும் படியுங்கள்
Subscribe