
2020 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அத்தனை பேர் கவனத்தையும் ஈர்த்து ஒட்டுமொத்த மீடியாக்களின் பார்வையையும் திரும்பிப் பார்க்க வைத்த காளை ராவணன். புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டி பளு தூக்கும் வீராங்கனை அனுராதா எஸ்.ஐக்கு பரிசாக கிடைத்த ராவணன் தான் அந்தக் காளை. முதல் பரிசு ராவணனுக்கு கிடைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் பரிசு கிடைத்தது.
அதன் பிறகு பல வாடிவாசல்களில் நின்று விளையாடிய ராவணன் கடந்த 2021ம் ஆண்டு ஒரு ஜல்லிக்கட்டில் நின்று விளையாடியதோடு வெளியேறிய ராவணனை உரிமையாளரும் பிடிக்க முடியாமல் தேடியபோது சில நாட்களுக்குப் பிறகு ஒரு இடத்தில் கரையான் புற்றை உடைத்த நிலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தது. இந்த தகவல் ஒலிம்பிக் போட்டிக்கான பளு தூக்கும் பயிற்சியில் இருந்த அனுராதாவிற்கு சொன்னபோது கதறி அழுததோடு உடனே ராவணனை காண ஊருக்கு கிளம்பி வந்து ராவணன் புதைக்கப்பட்ட இடத்தில் விழுந்து கதறி அழுத பிறகே வீட்டிற்குச் சென்றார்.
ராவணன் இழப்பு எங்களுக்கு பேரிழப்பு அந்த இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இனிமேல் அத்தனை காளைகளையும் ராவணன் பெயரிலேயே வாடியில் விடுவோம். வெற்றி வாகை சூடி வரும். அதற்காக அண்ணன் மாரிமுத்துவும் அம்மாவும் காளைகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள் என்றார்.

இந்த நிலையில்தான் இன்று வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் தேவாலய பொங்கல் விழா ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த வாடியில் ராவணன் தம்பியாக களமிறங்கிய 'ராவணன் 2' சீறிப்பாய்ந்து வந்ததும் அத்தனை வீரர்களும் பேரிக்காட்களில் ஏறிக் கொண்டனர். வீரர்களால் கிட்டே நெருங்க முடியவில்லை. வீரர்கள் மீதான கோபத்தால் வரவேற்பிற்காக கட்டியிருந்த வாழை மரங்களை கிழித்து ஆட்டம் காட்டியது. சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக நின்று விளையாடிய சின்ன ராவணனுக்கு பரிசுகள் குவிந்தது. கடைசி வரை பிடிக்க முடியவில்லை. காளை வெற்றி பெற்றதாக அறிவித்து வெளியேற்றப்பட்டது. அப்போதே 'சிறந்த காளை என எழுதுங்கப்பா' என்று மைக்கில் விளம்பரம் செய்தனர். அனைத்து காளைகளும் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் இறுதியாக எஸ்.ஐ அனுராதாவின் 'ராவணன் 2' சிறந்த காளையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. அனுராதா எஸ்.ஐயின் பெயரில் காளைகள் களமிறங்கினாலும் அவரது அண்ணன் மாரிமுத்துவே அத்தனை பயிற்சிகளும் கொடுத்து வளர்த்து வருகிறார்.
அதே போல 20 காளைகளை கட்டித் தழுவிய வடவாளம் கலியுக மெய்யர் குழுவைச் சேர்ந்த மாத்தூர் கவாஸ் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது. கயிறுகளுடன் அவிழ்க்கப்பட்ட காளைகளுக்கு பரிசுகள் தவிர்க்கப்பட்டது. புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி ஜல்லிக்கட்டை நடத்தி முடித்தனர்.