Advertisment

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர்.

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில்ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

Advertisment

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்துகதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில் மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத் தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe