Skip to main content

கடலூர் மாவட்டத்தை புறக்கணிக்கும் அந்தியோதயா விரைவு ரயில்!- பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
anty


கடலூர் மாவட்டத்தை புறக்கணிக்கும் அந்தியோதயா விரைவு ரயிலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்ல இரு வழி இருப்பு பாதைகள் உள்ளது. அதில் சென்னையில் இருந்து விருத்தாசலம் வழியாக செல்வது காட் லைன் என்பது ஒரு வழியும், சிதம்பரம் வழியாக செல்வது மெயின் லைன் ஆகும். இந்த இரு வழிகளில் அதி விரைவு, விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட சரக்கு ரயில்கள் என தினந்தோறும் பல ரயில்கள் செல்கிறது. இந்த இரு வழிகளிலும் இவ்வளவு ரயில்கள் சென்றாலும் பொதுமக்கள் பலருக்கு இன்னும் ரயில்களில் இடம் கிடைக்காமல் திரும்பி செல்லும் நிலையே உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் தென்மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக உள்ள திருநெல்வேலிக்கு சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரே ஒரு விரைவு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் சாதாரன பொதுமக்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பல பேர் பதிவு (ரிசர்வேசன்) இடம் கிடைக்காமல் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு பதிவு செய்யாத பயணிகள் அமரும் பெட்டியில் பல்வேறு சிரமத்தில் பயணம் செய்வார்கள். இது பயணிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. எனவே தான் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், தென் மாவட்ட மக்கள், மெயின் லையன் பகுதிகளில் இருந்து ரயில்களில் பயணம் செய்பவர்கள், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அமைச்சருக்கும் கடிதமும் அனுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ரயில்வே துறை பொதுமக்களின் கோரிக்கையை ஆண்டுகள் கடந்து ஏற்று சென்னை தாம்பரத்திலிருந்து - திருநெல்வேலிக்கு அந்தியோதயா விரைவு ரயிலை தினந்தோறும் இயக்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த ரயிலை ஜூன் 8-ந்தேதி (வெள்ளி) மாலை 4.30 மணிக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்., பின்னர் இந்த ரயில் தினந்தோறும் தாம்பரத்தில் இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது. மறுமார்க்கமாக திருநெல்வேலியில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை அடைகிறது. இது செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை,கும்பகோணம் உள்ளிட்ட 9 இடங்களில் நின்று செல்கிறது. இந்த ரயிலை அனைவரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் கடலூர் மாவட்ட மக்கள் இந்த ரயிலால் பெரும் கோபத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்டத்திலுள்ள மக்கள் கூறுகையில் கடலூர் மாவட்டம் டெல்டா பகுதியின் கடைமடை விவசாய பகுதியாகும். இந்த மாவட்டத்தில் தான் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழம், உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் உள்ளது. இந்த அந்தியோதயா ரயில் கடலூர் மாவட்டத்தில் எந்த இடத்திலும் நிற்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தை விட்டால் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தான் நிற்கிறது. கடலூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமையை ரயில்வே நிர்வாகம் செய்கிறது என்று மாவட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ரயில் கடலூர், சிதம்பரம் ஆகிய இரு இடத்தில் நிற்கவில்லையென்றால் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து அனைத்து அமைப்பினரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தபோவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா. இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சுனில்குமார் கூறுகையில் தென்மாவட்ட பகுதிகளில் இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அதேபோல் பேராசிரியர் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இங்குள்ள நடராஜர் கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல ஆயிரகணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள். மேலும் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கு இந்த ரயில் சிதம்பரத்தில் நின்று சென்றால் வசதியாக இருக்கும். சிதம்பரம் பகுதியில் பொருளாதரமும் மேம்படும். எனவே இந்த ரயிலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில் தொடக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும். சிதம்பரத்தில் ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் மாவட்டத்திலுள்ள அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்