'Anticipatory Bail Petition Void' - High Court Dismissed

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

Advertisment

அதே சமயம் இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் இந்த வழக்கில் விஜயபாஸ்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, 'எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமீன் மனு செல்லாததாகிவிட்டது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார். அதேநேரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை வரும் 29ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.