திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனை கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

Advertisment

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு சிபிஐ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் எஃப் ஐ ஆர் அடிப்படையில் கடத்தல், வீட்டில் அத்துமீறி நுழைதல், பணத்திற்காக ஆட்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குபதிவு செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் காவல்துறை தரப்பு ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என முறையிட்டனர். அதில் 'ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெகன் மூர்த்தியை சந்தித்த சிசிடிவி காட்சிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போதைய நிலையில் முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்திற்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான் என போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஜெகன்மூர்த்திக்கும் ஏடிஜிபிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது' என காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார். 

இவ்வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன், “வாக்குமூலம், சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள், சிசிடிவி கேமரா காட்சிகள் என அனைத்தையும் அலசி பார்க்கும்போது இந்த வழக்கில் அவருக்குள்ள தொடர்பு குறித்து ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. எனவே பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து  பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவானதாக தகவல் வெளியானது. மேலும் இந்த விவகாரத்தில் ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களை அழைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்ட நிலையில் ஜெகன்மூர்த்தியின் செல்போன் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுநர் என அனைவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகவும் தன் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர். ரத்து செய்யக் கோரியும் பூவை ஜெகன் மூர்த்தி சார்பாக உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,“ஆதாரங்கள் இல்லாமல் தன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தன்னுடைய பெயரை இழிவுபடுத்தும் விதமாகவும் களங்கப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் மனோஜ் மிஷ்ரா மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (30.06.2025) விசாரணைக்கு வர உள்ளது.