Skip to main content

போதைக்கு எதிரான விழிப்புணர்வு; மேடையில் குட்டி கதை சொன்ன நக்கீரன் ஆசிரியர் 

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

Anti-drug awareness; Nakeeran Editor told a short story on the stage

 

போதைக்கு  எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 1 கோடி கையெழுத்து  இயக்கம் தொடங்கி நடைபெற்றது. இதன் இறுதி விழா நேற்று(16ந் தேதி) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில்  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், வி.சி.க. தலைவரும், எம்.பியுமான தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நக்கீரன் ஆசிரியர், சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கோபி நயினார், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

இதில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “ஒருவனின் போதையால் அவன் குடும்பம் தள்ளாடுகிறது. சின்ன வரியில் கவிஞர் பாடியுள்ளார் . ஒரு காவல் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சாவை விற்றவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். வழக்கு வந்தவுடன் விசாரணையில், பிடிபட்ட கஞ்சாவை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது காவல்துறை தரப்பில், ‘கஞ்சாவை எலி சாப்பிட்டது’ என பதில் தந்தனர். அதன்பிறகு இந்த வழக்கில் கஞ்சா வித்தவன் வெளியில் வந்துவிட்டான். இந்த சூழ்நிலையில் நாம் இப்போ போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறோம். 

 

போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் இந்த முயற்சிக்கே நாம் பாராட்ட வேண்டும். காசியில் கஞ்சா இலவசமாக கிடைப்பது  பிரதமராக உள்ள மோடிக்கு தெரியாதா என்ன; உலக நடப்பையே தன் கையில் வைத்திருக்கும் அவருக்கு இந்த விவகாரம் தெரியாமலா இருக்கும். செப்டம்பர் 2021ல் குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயன் பிடிபட்டது. அதனுடைய மதிப்பு ரூ. 21 கோடி.  தமிழகத்தில் கஞ்சாவை எலி சாப்பிட்டதை போன்று அங்கு எந்த எலி சாப்பிட்டது என தெரியவில்லை” என்று பேசினார்.

 

தொடர்ந்து மேடையில் போதையால் எப்படியான விளைவு ஏற்படும் என குட்டி கதை ஒன்றை நக்கீரன் ஆசிரியர் சொன்னார். அவர் சொன்ன குட்டி கதை; “ஒரு ஈ, எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத ஒரு நபரை, எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாத நபரை அழைத்து வந்து அவனை கெட்டவனாக மாற்ற வேண்டும் என ஒரு நாட்டின் அரசன் சோதித்துப் பார்த்துள்ளார். 

 

அழைத்து வரப்பட்ட அந்த நபரிடம், ‘மது, மாது, கொலை இதில் நீ ஏதாவது ஒன்றைச் செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும்’ என அரசன் கட்டளை இட்டுள்ளார். அந்த நபர் எதுவுமே செய்யவில்லை என்றால் தன்னுடைய உயிர் போய்விடும்; அதனால் எதைச் செய்யலாம் என யோசித்துள்ளார். 

 

பெண்ணின் இச்சைக்கு ஈடுபட்டால் அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும். ஆகையால் அது வேண்டாம். அடுத்து கொலை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தன்னால் உயிர் போனவர் குடும்பம் சிரமப்படுவதோடு தானும் சிறைக்குச் செல்ல நேர்ந்திடும். ஆகையால் குடிப்பதே சரி என முடிவெடுத்து, அங்கு உள்ள மதுவை குடித்தவுடன் போதை தலைக்கேறி முதலில் அந்த பெண்ணை தன் இச்சைக்கு உட்படுத்தினான். பிறகு அந்த போதையில் மன்னன் பக்கமிருந்த வாளைக் கொண்டு வெட்டி வீசினான். இப்படி குடியால் மொத்தமும் கெட்டுப்போனது. 

 

இளைஞர்கள் இந்த கையெழுத்து இயக்கம் நடத்திய காரணத்தால், நாளைய போதை இல்லா நாடாக மாறும் நம்பிக்கை உள்ளது. இந்த நிகழ்வை முன்னெடுத்த காரணத்திற்காக நக்கீரன் சார்பாக வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்