/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2431.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன். இவருக்குச் சொந்தமாக சேலம் நெடுஞ்சாலை நகரில் சொகுசு பங்களா உள்ளது. இவருடைய வீட்டுக்கு பக்கத்து தெருவில்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடும் இருக்கிறது. தரணிதரன் வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், புதன்கிழமை (டிச. 15) சோதனை நடத்தினர்.
காலை 6.30 மணியளவில் தொடங்கிய சோதனை, மாலை 6 மணிக்கு முடிந்தது. அவருடைய வீட்டில் இருந்து போலீசார் ஒரு சிறிய கைப்பையை மட்டும் எடுத்துச் சென்றனர். அதில் சில ஆவணங்களும், ஒரு செல்போனும், ஒரு சிறிய டைரியும் எடுத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தரணிதரன் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில், சேலம் ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள அஷ்வா பார்க் நட்சத்திர விடுதியிலும் சோதனை நடந்தது. குழந்தைவேலு என்பவருக்குச் சொந்தமான இந்த விடுதியில், நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள குழந்தைவேலுவின் வீடு, மறவனேரியில் உள்ள தரணிதரனின் ஆடிட்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் பெரிய அளவில் பணமோ, நகைகளோ சிக்கவில்லை.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை குறித்து அதிமுக புள்ளிகள் சிலரிடம் பேசினோம். ''சேலம், நாமக்கல், ஈரோடு வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்களில் 40 சதவீதம் தங்கமணியின் பினாமியின் பெயர்களில்தான் இயங்குகின்றன. உதாரணமாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த முருக கடவுள், கிருஷ்ணர் கடவுள் பெயரிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து பஸ்களையும் தங்கமணிதான் பினாமிகள் மூலம் வாங்கியிருப்பதாக அதிமுக கட்சிக்குள்ளேயே பலமான பேச்சு உண்டு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_624.jpg)
இதில் கிருஷ்ணர் கடவுள் பெயரிலான நிறுவனத்திடம் இருந்து 7 பஸ்களை தலா 7 கோடி ரூபாய்க்கு வழித்தட உரிமையுடன் தங்கமணி தரப்பில் வாங்கியுள்ளனர். முருக கடவுள் பெயரிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து 4 பஸ்களை, வழித்தட உரிமையுடன் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பஸ்களை தலா 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். இவ்விரு நிறுவன உரிமையாளர்களுக்கும் நிறைய அழுத்தம் கொடுத்தே வாங்கியுள்ளனர். ஆனால், சந்தேகத்திற்குரிய பஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் ஒரு இடத்தில் கூட போலீசார் சோதனை நடத்தாதது வியப்பாக இருக்கிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள், பிரதான இடத்தில் உள்ள சொத்துகளை குறி வைத்துவிட்டால் அவற்றை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுவார்கள். அவ்வாறு எக்கச்சக்கமான சொத்துகளை சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலையைக் கொடுத்து, பினாமி பெயர்களில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
எதிர்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் வரலாம் என்பதால், யாரிடம் இருந்து சொத்துகளை வாங்குகிறார்களோ அந்த சொத்துகளை அதே உரிமையாளர்களின் பெயர்களிலேயே தொடரச் செய்து வருகின்றனர். அதனால்தான் இப்போது நடந்த சோதனைகளின்போது கூட பெரிய அளவில் பணமோ, நகைகளோ, ஆவணங்களோ சிக்கவில்லை” என்கிறார்கள் அதிமுக புள்ளிகள்.
இது தொடர்பாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கேட்டபோது, ''வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எப்.ஐ.ஆர். பதிவு செய்வதும், அதன்பேரில் புகாருக்கு ஆளானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதும் சட்டப்பூர்வமான சம்பிரதாய நடவடிக்கைகள்தான். இதன் பிறகு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவருடைய பினாமிகளாக சந்தேகப்பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விடுவோம்.
விசாரணையின்போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் பல புதிய இடங்களில் சோதனைகள் தொடரலாம். புதிதாக சிலர் மீது வழக்குகளும் பாயக்கூடும். இப்போது நடந்த சோதனையை வைத்து எதையும் இறுதி செய்துவிட முடியாது. இதெல்லாமே ஆரம்பம்தான். இனிமேல்தான் கிடுக்கிப்பிடி விசாரணையே இருக்கிறது.
கடந்த 2017க்குப் பிறகு பத்திரப்பதிவுத்துறையில் நடந்த அதிக மதிப்பிலான கிரைய ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். அதன் மீதும் விசாரணை நடந்து வருகிறது. தங்கமணியின் பினாமிகள் ஆந்திராவில் நிறைய இடங்களில் முதலீடு செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் மேலும் சில இடங்களில் சோதனை நடத்தப்படும்” என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)